முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Tuesday, March 15, 2011

வெளிநாட்டு ஏக்கங்கள்....


இதயத்தை  இரும்பாக்கிக் கொண்டு
எல்லோருக்கும் சொன்னேன்,
ச்சீ ச்சீ என்னது!சிறுபிள்ளையா நீ?

கனத்த மனதுடன்
கண்களில் முட்டிய  கண்ணிர்,
அனுமதி இல்லாமல் ஏன் வந்தது  

என்று என்னையே நொந்து கொண்டேன்,

விட்டால் வெடித்துவிடுமோ என்று
நினைக்கும் அளவிற்கு தொண்டைக் குழிக்குள்
அணை போட்டு அடக்கி வைத்திருக்கும் 

என் அன்னையின் அழுகை!

சத்தம் போடாமல்
சாரை சாரையாய் நீர் பாய்ச்சும்
என் மனைவியின் விழிகள்!

ஊனமுற்ற மனதுடன்
ஊமையாய் நின்றிருந்தேன்,
ஆனால் ,
உள்ளத்தில் ஒரு உலக அணு சோதனையே
நடந்துக் கொண்டுருந்தது!

சம்பாதிக்கும் கனவில்
காலடி எடுத்து வைத்தேன் பாலைவனத்தை நோக்கி!
எத்தனை பேருகளுடைய கண்ணீரை விழுங்கிக்கொண்டு
வெறுமையாய் சிரித்தது !

எத்துனை நபர்களின் முதுகெழும்பில்
இத்தனை உயரமான கட்டிடங்கள்!

தங்குவதற்கு சென்றேன் தங்கும் அறையை நோக்கி
ஆஹா ! என்னை போலவே ,எத்துனை பேர் இங்கே!

கூத்தும் கும்மாளமாய்  ஒரே சிரிப்பு,
எல்லோரும் சென்றோம் படுக்கைக்கு,
ஏனோ தெரியவில்லை என்னையும் அறியாமல்
சுற்றி சூழ்ந்துக்கொண்ட ஒட்டு மொத்த அழுத்தமும் ,
சற்றே சப்தத்துடன் வெளியேறியது என் அழுகை சத்தம்.

உடனே வந்தது ஒரு கை
என் தோள்களை தொட்டு சொன்னார் அவர்,
ஒரு மாதம் அப்படித்தானே இருக்கும் என்று,

நான் வெகுளியாய் கேட்டேன் மாதத்திற்கு பிறகு
மறந்து விடுமா என்று ? அவர்  சொன்னார்
இல்லை மரத்து விடும்.

போக போக கற்றுக்கொண்டேன் எல்லோரையும் போல
தலையணைக்குள் கதறும் சப்தமே இல்லாமல்!

தொலைபேசியில் ஒவ்வொரு  முறையும்
பேச்சுக்களை விட என் மனைவின்
அழுகுரல் மட்டுமே
கனமாக விழும் என் காதுகளில்!

தழு தழுத்த குரலில்
மெதுவாய் அவளிடம் சொன்னேன்,
எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என்று,
வெட்கமே இல்லாமல் இரண்டாம் வருடமாய்

-யாசர் அரஃபாத்

4 comments:

  1. உங்கள் கருத்துக்கள் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும்
    SO PLEASE POST YOUR COMMENTS HERE

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    என்னுடைய கவிதைகளை தங்களின் தளத்தில் இட்டதில் மிக்க மகிழ்ச்சி;


    இஸ்லாமியச் சகோதரன்
    -யாசர் அரஃபாத்
    http://itzyasa.blogspot.com

    ReplyDelete
  3. அலைக்குமுஸ்ஸலாம்,
    சகோதர் யாசர் அரஃபாத் அவர்களே! உங்களுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை.நான் உங்கள் கவிதைக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையல்ல..தங்கள் கவி பணி தொடர வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. மனம் துளைத்த நல்ல கவிதை.வாழ்த்துக்கள் சார்.
    விரட்டும் வாழ்க்கைக்கும் நமக்குமான் கண்ணாமூச்சி எப்பொழுதும் நடந்து கொண்டேதான்/

    ReplyDelete